Monday, 30 April 2012

இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்

இலங்கை தம்புள்ள எனும் இடத்தில் உள்ள 67 ஆண்டுகால பாரம்பரியமிக்க பள்ளிவாசலை சேதப்படுத்தி முற்றிலுமாக தகர்க்க முயலும் சிங்கள புத்த குருமார்களின் செயலைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் இனவெறி ராஜபக்ஷே அரசைக் கண்டித்தும் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


மசூதி அமைந்துள்ள இடம் பௌத்தர்களின் புனித இடம் என்று கூறி அங்குள்ள பள்ளிவாசல் இடிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. கடந்த 20.04.2012 அன்று முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2000க்கும் அதிகமான புத்த மதகுருமார்கள் ஆயுதங்களுடன் காவல்துறை துணையோடு அப்பள்ளிவாசலைச் சுற்றி வளைத்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றி, பள்ளிவாசலை சேதப்படுத்தியுள்ளனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களது வெறித்தனம் முழுமையாக நிறைவேறவில்லை. ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரிய கோயில்களையும், தேவாலயங்களையும் சேதப்படுத்தி அழித்த சிங்கள வெறியர்கள் இப்போது தமிழ் பேசும் முஸ்லிம்களின் பள்ளிவாசலையும் சேதப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

இதை முன்னிட்டு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைகளையும் வழிப்பாட்டு உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிங்கள இனவெறியர்களின் பாசிச போக்கை கண்டித்தும் தமுமுக நடத்திய இப்போராட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவர்கள் பேரா.எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், நாம்தமிழர் கட்சி அய்யநாதன்,தமுமுக செயலாளர்கள் பேரா. ஹாஜாகனி, மீரான் மொய்தீன், சேவ் தமிழ் இயக்கத்தின் பரிமளா, காந்திய மக்கள் இயக்க மாநில செயலாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியன்ஜான் முஸ்லிம் சமுதாய கூட்டமைப்பு அனிபா, மே 17 இயக்கத்தினர் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள், சிறுபான்மை சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். இப்போராட்டத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.


தாம்பரத்தில் இருந்து 11 வண்டிகளில் நூற்றுக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். காஞ்சி வடக்கு மாவட்டத்தில் இருந்து 400 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். 


1 comment: